சாங்சோ: சீன ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று சீனாவின் சாங்சோ நகரில் தொடங்குகிறது. பிடபிள்யூஎப் போட்டிகளில் இது ஆயிரம் தரவரிசைப் புள்ளிகள் கொண்ட முக்கியப் போட்டி என்பதால் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் களம் காண உள்ளனர். இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரணாய், லக்ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபாமா உபாத்யயா, உன்னதி ஹோடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் காண உள்ளனர்.
இரட்டையர் பிரிவில் முன்னாள் நெம்பர் ஒன் இணை சாத்விக்/சிராக் மட்டும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்க வாய்ப்பு பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி, அம்ருதா பிரமுதேஷ்/சோனாலி சிங், சகோதரிகள் ருதபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா என 3 இணைகள் விளையாட உள்ளன. கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் கபூர்/ருத்விகா சிவானி, ஆஷித் சூர்யா/அம்ருதா பிரமுதேஷ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த பிடபிள்யூஎப் பேட்மின்டன் போட்டிகளில் யுஎஸ் ஓபனில் மட்டுமே இந்திய வீரர் சாம்பியன் வென்றார். பின் வரிசை வீரரான ஆயுஷ் ஷெட்டி(20) இந்த சாதனையை படைத்தார். அவரை தவிர முன்னணி வீரர்கள், வீராங்கனைகள யாரும், ஒற்றையர், இரட்டையர் என எந்த பிரிவிலும் பைனலுக்கு கூட முன்னேறியதில்லை. எனவே முக்கிய போட்டியான இந்த சீன ஓபனிலாவது இந்தியர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் காத்திருக்கின்றனர். அது இந்திய ரசிகர்களின் எதிர்பர்ப்பாகவும் உள்ளது.