ஷென்ஜென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை தோல்வியை தழுவியது. சீனாவின் ஷென்ஜென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மின்டன் போட்டிகள் நடந்து வந்தன. ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் சிறப்பாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அவர்கள், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவை சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீரர்கள் கிம் வான் ஹோ, சியோ சங் ஜே இணையுடன் மோதினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய வீரர்கள் சீனா மாஸ்டர்ஸ் போட்டியிலும் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் களமிறங்கினர். முதல் செட்டின் துவக்கத்தில் 14-7 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்த சாத்விக், சிராக் இணை, பின், 19-21 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை பறிகொடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டையும், 15-21 என்ற புள்ளிக் கணக்கில் அவர்கள் இழந்ததால், 2ம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற கொரிய இணை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.