சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.5 கோடி இ-சிகரெட் பறிமுதல்: சென்னை, கேரளாவை சேர்ந்த 3 தொழிலதிபர் கைது
தூத்துக்குடி: சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 தொழிலதிபர்களை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்கைது செய்தனர். சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவதுதான் இ-சிகரெட் ஆகும். ஒரு இ-சிகரெட்டின் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு இ-சிகரெட்டை 10 ஆயிரம் முறை புகைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் கூட சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
கடந்த 2019லிருந்து இந்தியாவில் இ-சிகரெட்டை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னரில் தனியார் நிறுவனத்திற்கு குடைகள் வந்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் 20 அடி கன்டெய்னரில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், பெயரளவிற்கு கொஞ்சம் குடைகள் இருந்துள்ளது. அதன் மத்தியில் மறைத்து இ-சிகரெட் பாக்கெட்டுகள் கடத்திக் வந்திருப்பது தெரிய வந்தது.
இவற்றின் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.10.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சீனாவிலிருந்து குடைகளை இறக்குமதி செய்வதாக கணக்கு காட்டி இ-சிகரெட்டுகளை கடத்தி வந்த தொழிலதிபர்களான கேரளாவைச் சேர்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் (56) ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அவர்களை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

