Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி பட்டாசுகள் பறிமுதல்: மும்பை தொழிலதிபர்கள் உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடி: சீனாவில் இருந்து சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு கடத்திய ரூ.5 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக மும்பை தொழிலதிபர்கள் உள்ளிட்ட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தப்படுகிறதா என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீன துறைமுகமான நிங்பேவில் இருந்து ஒரு கன்டெய்னர் கப்பல் வந்துள்ளது. அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்த 2 கன்டெய்னர்களில் இன்ஜினியரிங் டூல்ஸ்கள், சிறிய தட்டையான ட்ராலிகள் இருப்பதாக அதற்குரிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த இரு கன்டெய்னர்களையும் திறந்து சோதனையிட்டனர்.

அப்போது அவற்றில் சிலிக்கன் சீலென்ட் கன் எனப்படும் தகரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் ஒட்டுவதற்கு பயன்படும் உபகரணங்களும், அதற்கான சிலிக்கான் பசை போன்ற பொருட்களும் இருந்தன. மேலும் அதற்குள் சீனபட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 8 ஆயிரத்து 400 பாக்ஸ்களில் இருந்த சீன பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இதன் மதிப்பு ரூ.5 கோடி. மேலும் ரூ.35 லட்சம் மதிப்புள்ள சீன சிலிக்கன் சீலென்ட் கன் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சட்ட விரோதமாக சீனபட்டாசுகள் இறக்குமதியில் ஈடுபட்டது தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, தூத்துக்குடி 3வது ஜே எம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு மும்பை தொழிலதிபரை புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர்.

* கையில் வைத்து வெடிக்கலாம்

சீனபட்டாசுகள் இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் தற்போது பிடிபட்டுள்ள பைப் வகை சீன பட்டாசுகள் கையில் வைத்துக் கொண்டே வெடிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரே பைப் வெடியில் இருந்து 288 ஷாட்கள் வானில் 200 மீட்டர் தூரம் சென்று வெடிக்கும் தன்மையுடையது.