Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சீனா 2000 சதுர கிமீ நிலம் ஆக்கிரமித்துள்ளதாக பேச்சு உண்மையான இந்தியர் இப்படி பேசமாட்டார்: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இந்திய சீன எல்லை பிரச்னை குறித்து பேசி இருந்தார். குறிப்பாக இந்திய சீன எல்லை பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து 2000 ச.கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று பேசி இருந்தார். மேலும் சீன எல்லை பிரச்சனையில் இந்திய அரசு தோல்வி அடைந்து விட்டது எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

இது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை ரத்து செ்ய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததபோது அவர்கள் எழுப்பிய கேள்வியில், ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இதுபோன்ற விவகாரங்களை அவர் நாடாளுமன்றத்தில் பேசுவதை விட்டு பொதுவெளியில் ஏன் பேசுகிறார்.

சுமார் 2000 சதுர கிமீ இந்திய பரப்பை சீனா அபகரித்து இருக்கிறது என்பது ராகுல் காந்திக்கு எப்படி தெரியும்?. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் பேசுகிறார். ஒரு உண்மையான இந்தியன் இவ்வாறு நிச்சயமாக பேசமாட்டார் என அடுக்கடுக்காக கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து அதற்கு பதிலளித்த ராகுல் காந்திர தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சம்பந்தப்பட்ட இந்த பேச்சை ராகுல் காந்தி பேசிய போது அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது.

மேலும் இப்படியான அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து ஒருவரை தொடர்ச்சியாக துன்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், உங்களுக்கு பேச்சுரிமை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது என்பதற்காக நீங்கள் அதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள் என்று கூறியதோடு ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இது தொடர்பாக எதிர்மனுதாரருக்கு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

* ராகுல் காந்தி சீன குரு: பாஜ விமர்சனம்

பாஜ தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் அமித் மாளவியா ராகுல் காந்தியை சீன குரு என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிடுகையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும்,நாட்டின் இறையாண்மையையும் பற்றி பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக சீன குரு ராகுல் காந்தியை உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. கற்பனை செய்து பாருங்கள். ஒரு எதிர்க்கட்சி தலைவர் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக மீண்டும்,மீண்டும் கண்டிக்கப்படுகிறார். பாகிஸ்தான் போன்ற எதிரி நாட்டை வலுவான பொருளாதாரம் கொண்ட நாடு என்று அவர் கூறுவது போல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

* தேச பக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் சீனா குறித்த தகவலை தேடினர்: காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் தனது எக்ஸ் தள பதிவில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வானில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததில் இருந்து ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியரும் பதில்களை தேடி வருகின்றனர். ஆனால் பதில்களை வழங்குவதற்கு பதிலாக கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசானது மறுத்தல், திசை திருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல் என்ற கொள்கையின் மூலமாக உண்மையை இருட்டடிப்பு மற்றும் மறைக்கவும் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.