தைபெய்: தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டையும் சீனா எதிர்க்கின்றது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தைவானுக்கு எதிராக சீன கடற்படை முற்றுகை அல்லது பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார். இதேபோல் தைவானை சீனா சொந்தம் கொண்டாடினால் தைவானுக்கு அருகில் உள்ள தீவில் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படும் என்று ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின்ஜிரோ கெய்சுமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் பிரதமரின் கருத்துக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தைவான் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள தென்மேற்கு தீவுகளில் ஜப்பான் தாக்குதல் ஆயுதங்களை நிலைநிறுத்துவது பிராந்திய பதற்றங்களை உருவாக்குவதற்கும், ராணுவ மோதலை தூண்டுவதற்கும் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஜப்பான் பிரதமரின் சமீபத்திய தைவான் குறித்த தவறான கருத்துகளுடன் சேர்த்து பார்க்கும்போது ஜப்பானின் இந்த திட்டமானது மிகவும் ஆபத்தான வளர்ச்சியாகும் ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தொலைபேசியில் பேசினார்.



