Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சீனாவுக்கு போட்டியாக பிரம்மபுத்ரா நதி மீது புதிய நீர்மின் திட்டம்: ரூ. 7 லட்சம் கோடியில் இந்தியா அதிரடி

புதுடெல்லி: சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் இடையே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் திபெத் பகுதியான யார்லுங் சாங்போ ஆற்றின் மீது, உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை சீனா கட்டத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளில் பிரம்மபுத்திரா நதியால் பயனடையும் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது சீனாவுக்கு போட்டியாக சுமார் ரூ.7 லட்சம் கோடி மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்தை அமைக்கும் பணி குறித்து இந்தியா திட்டமிட்டு வருவது தெரிய வந்துள்ளது. சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் இந்த திட்டம் அமைய உள்ளது.

அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, 2047 ஆம் ஆண்டுக்குள் பிரம்மபுத்ரா ஆற்றில் இருந்து 76 ஜிகாவாட்களுக்கு மேல் நீர்மின்சாரத்தை பெறும் வகையில் இந்த திட்டம் உருவாகி உள்ளது. இந்தியாவின் மின் திட்டமிடல் ஆணையம் ரூ.7 லட்சம் கோடியில் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம், அருணாச்சல் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பிரம்மபுத்ரா நிதி ஓடும் துணைஆறுகளையும் சேர்த்து இந்த மிகப்பெரிய நீர்மின் திட்டம் உருவாக உள்ளது.

76 ஜிகாவாட் மின்சாரம் மட்டும் அல்லாமல் நீரை பம்ப் செய்யும் நிலையங்களிலிருந்து கூடுதலாக 11.1 ஜிகாவாட் மின்சாரம் பெறும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட உள்ளது. ஏனெனில் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகை அருணாச்சலப் பிரதேசம், அசாம், சிக்கிம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது என்பதால் அந்த பகுதிகளுக்கும் பயன்பெறும் வகையில் மெகா திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட திட்டம் 2035ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும். இதற்கு ரூ.2 லட்சம் கோடி ஆகும். 2047ஆம் ஆண்டு முடிக்கப்படும் இரண்டாம் கட்டத்திற்கு ரூ.5 லட்சம் கோடி செலவாகும்.