சீனா போல சர்வாதிகார ஆட்சி நடத்த முடியாது இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடக்கிறது: கொலம்பியா பல்கலையில் ராகுல் காந்தி பேச்சு
புதுடெல்லி: இந்தியாவில் தற்போது ஜனநாயக அமைப்பின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடந்து வருவதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசி உள்ளார். தென் அமெரிக்காவில் 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டின் மெடலினியில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பலம் முற்றிலும் வேறுபட்டது. குறிப்பாக, சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா சிக்கலான அமைப்பை கொண்டுள்ளது. இந்தியா மிகவும் பழமையான ஆன்மீக பாரம்பரியத்தையும், இன்றைய உலகில் பயனுள்ள ஆழமான கருத்துக்களைக் கொண்ட சிந்தனை முறையையும் கொண்டுள்ளது.
பாரம்பரியம், சிந்தனை முறையின் அடிப்படையில் நாடு வழங்கக் கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. இந்தியாவைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதே சமயம் இந்திய கட்டமைப்பிற்குள் தவறுகள் உள்ளன. இந்தியா கடக்க வேண்டிய அபாயங்களும் உள்ளன. இதில் மிகப்பெரிய ஆபத்து, ஜனநாயக அமைப்பின் மீதான ஒட்டுமொத்த தாக்குதல். ஏனென்றால் இந்தியாவில் பல மதங்கள், பல மரபுகள், பல மொழிகள் உள்ளன. அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் இந்தியா போன்ற நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
வெவ்வேறு மரபுகள், மதங்கள் மற்றும் கருத்துக்களுக்கு இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த முறை ஜனநாயக அமைப்பு. தற்போது இந்தியாவில் ஜனநாயக அமைப்பின் மீது ஒட்டுமொத்த தாக்குதல் நடந்து வருகிறது. எனவே அதுதான் மிகப்பெரிய ஆபத்து. சீனா செய்வதை நாம் செய்ய முடியாது. அதாவது மக்களை அடக்கி ஒரு சர்வாதிகார அமைப்பை நடத்த இந்தியாவால் முடியாது. இந்தியாவின் வடிவமைப்பு அதை ஒருபோதும் ஏற்காது. இவ்வாறு ராகுல் காந்தி பேசி உள்ளார்.