Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய அதிநவீன ஆயுதங்களுடன் சீனா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: முதல்முறையாக ஒன்று கூடிய அதிபர்கள் ஜின்பிங், புடின், கிம்

பீஜிங்: இரண்டாம் உலகப் போரின் 80ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, சீனா தனது ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பை நடத்தியது. இதில் அதிநவீன புதிய ஆயுதங்களை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த அணிவகுப்பை ரஷ்ய அதிபர் புடின், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உள்ளிட்ட 26 உலக தலைவர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேபாள பிரதமர் சர்மா ஒலி, மாலத்தீவு அதிபர் முய்சு உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத் பங்கேற்றார்.

இதில், அமெரிக்காவுக்கு எதிரான சீனா, ரஷ்யா, வடகொரியா அதிபர்கள் ஒரே இடத்தில் சந்தித்தது உலகம் முழுவதும் கவனத்தை பெற்றது. அதே சமயம், அமெரிக்கா, ஐரோப்பிய தலைவர்கள் பெரும்பாலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஜப்பான், தென் கொரியாவும் விலகி நின்றன. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக உலகிலேயே ராணுவத்திற்கு அதிக நிதியை (ரூ.22 லட்சம் கோடி) செலவிடும் நாடான சீனாவின் இந்த அணிவகுப்பில் அதன் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் புத்தம் புதிய நவீன ஆயுதங்கள் இடம் பெற்றன.

திரவஎரிபொருள் மூலம் இயங்கும் டிசி-5சி கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய அணு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. இது 20 ஆயிரம் கிமீ தூரம் உள்ள இலக்கை தகர்க்கக் கூடியது. எந்த பாதுகாப்பு அமைப்பாலும் தடுக்க முடியாதது. இதன் மூலம் உலகின் எந்த மூலையிலும் உள்ள இலக்கையும் குறிவைக்க முடியும்.

இதுதவிர, லேசர் பாதுகாப்பு அமைப்பு, ஆழ்கடல் டிரோன்கள், எச்-6ஜே நீண்ட தூர குண்டுவீச்சு விமானம், ராணுவம் மற்றும் கடற்படை டிரோன்கள், 5000 கிமீ இலக்கை தகர்க்கும் டிஎப்-26டி கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள், சிஜே-1000 நீண்ட தூர ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கேரியர் கில்லர் ஏவுகணைகள் உள்ளிட்டவை முதல் முறையாக வெளிஉலகிற்கு காட்டியது சீனா.

அணிவகுப்பில் உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிரான வெற்றி, நவீன காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனாவின் முதல் முழுமையான வெற்றி என குறிப்பிட்டார். 2ம் உலகப் போரில் மகத்தான தியாகத்துடன் உலக அமைதியைப் பாதுகாப்பதற்கு சீன மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதாக பாராட்டிய ஜின்பிங், சீனாவின் புத்துணர்ச்சியை இனி தடுக்க முடியாது என சவால் விடுத்தார். 2ம் உலகப் போரில் வெற்றி பெற உதவிய அமெரிக்கா குறித்து ஜின்பிங் எந்த வார்த்தையும் கூறவில்லை.

உக்ரைனுக்கு எதிராக போரிட்டதற்காக வட கொரியாவுக்கு புடின் நன்றி

உக்ரைனுக்கு எதிராக போரிட்டதற்காக வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் நன்றி தெரிவித்தார். இரண்டாம் உலக போரின் 80ம் ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் பீஜிங்கில் நேற்று நடந்த அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு முடிந்ததும் புடின், கிம் ஜோங் ஆகியோர் சீன அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினர்.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புடின்,‘‘உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்கள் துணிச்சலாகவும்,வீரத்துடனும் போரிட்டனர். குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைனிய படைகளை வெளியேற்ற வட கொரிய படைகள் ரஷ்யாவுக்கு உதவின. வட கொரிய சிறப்பு ஆயுதப்படைகளும் செய்த தியாகங்களை நாங்கள் மறக்க மாட்டோம். ரஷ்ய மக்கள் சார்பில் இந்த கூட்டு போரில் பங்கேற்றதற்கு நன்றி’’ என்றார்.

கிம் ஜோங் உன்,‘‘ வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்ய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் ஒரு உடன் பிறந்தவரின் கடமையாக நிச்சயம் செய்து கொடுப்பேன். என்னால் முடிந்த அளவு செய்வேன்’’ என்றார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுடன் இணைந்து 15,000 வட கொரிய வீரர்கள் போரில் ஈடுபட்டனர் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் டென்ஷன்

சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மூவரும் முதல் முறையாக ஒரே இடத்தில் கூடியது, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிபர் டிரம்ப் டென்ஷனாகி உள்ளார். உலகப் போரில் சீனாவுக்காக அமெரிக்க வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை சீன அதிபர் ஜின்பிங் மறந்து விட்டதாக கூறிய அவர் ரஷ்யா, வடகொரியாவின் சதித்திட்டத்தை வரவேற்பதாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.