சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
வாஷிங்டன் : சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. சீனாவை விட்டுவிட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. சீனா மீது டிரம்ப் வரியை அதிகரிக்காதது குறித்து அமெரிக்காவிலும் பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். மேலும் சீனா மீது விதித்த பதிலடி வரியையும் அமெரிக்கா 90 நாள்கள் வரை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது.
இந்த வரி நிறுத்தத்திற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில், சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நவம்பர் 10ம் தேதி வரை கூடுதல் வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் உத்தாவில் கையெழுத்திட்டார் டொனால்டு டிரம்ப். இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீனர்கள் மிகவும் நன்றாக நடந்து கொள்கின்றனர், சீன அதிபருக்கும் எனக்குமான உறவு மிகவும் நன்றாக உள்ளது. சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு அசாதாரண அச்சுறுத்தலாக உள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் சீனா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது,"இவ்வாறு தெரிவித்தார்.