வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. டிரம்ப் அமெரிக்க அதிபராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இருவரும் கடைசியாக 2019-ம் ஆண்டு நேரில் சந்தித்து பேசியிருந்தனர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையில் வர்த்தக மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தென் கொரிய நகரான பூசானில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 100 நிமிடங்கள் நீடித்தத்தாகவும், இது திட்டமிடப்பட்டதை விட அதிக நேரம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு, இரு தலைவர்களும் சந்திப்பு குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜின்பிங் உடனான சந்திப்பு குறித்து இது ஓர் அற்புதமான சந்திப்பு. அவர் ஒரு சிறந்த தலைவர் என்று டிரம்ப் கூறினார். நாங்கள் பல முக்கியமான விஷயங்களில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அனேகமாக அனைத்து பிரச்சனைகளிலும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சீனாவுக்கு அமெரிக்காவின் என்விடியா நிறுவனம் ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்வது பற்றி விவாதித்ததாக டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஜின்பிங்குடன் விவாதித்தேன் என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் உடனான சந்திப்பின் போது ஜின்பிங்கின் கருத்துக்கள் குறித்த அறிக்கையை சீனாவின் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன் படி, முக்கிய வர்த்தக பிரச்னைகளை தீர்க்க இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீனத் தலைவர் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுக்கு பிறகு சீன அதிபர் ஸி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளார். டிரம்பை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி; தொலைபேசியில் அவருடன் 3 முறை பேசினேன். தங்கள் தலைமையின்கீழ் சீன - அமெரிக்க உறவு ஸ்திரமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக உயர்த்தும் டிரம்ப் லட்சியத்துக்கு உதவுவதாகவே சின வளர்ச்சி உள்ளதாக ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
