பெய்ஜிங்: 300 அணைகளை ஒரே நேரத்தில் இடித்து தள்ளிய சீனாவின் செயல்தான் உலகநாடுகளில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு சீனா கொடுத்த விளக்கம் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் யுனான், குய்சோ மற்றும் சிச்சுவான் மாகாணங்கள் வழியாக சுமார் 400 கிலோமீட்டர் தூரத்துக்கு சிசுய் ஹீ நதி பாய்கிறது. இந்த நதியை சிவப்பு நதி எனவும் மக்கள் அழைக்கின்றனர். இந்த நதியின் குறுக்கே மக்கள் பயன்பாட்டிற்காக சீனா 350க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியிருந்தது. இந்த அணைகளில் சுமார் 300 அணைகளை திடீர் என இடித்து தள்ளியுள்ளது.
அதே போல இந்த நதியின் ஓரங்களில் செயல்பட்டு வந்த 373 சிறிய நீர் மீன் நிலையங்களில் 342 நிலையங்களின் செயல்பாடுகள் சீனா நிறுத்தியுள்ளது. இந்த நதிகளில் வாழும் மீன் இனங்கள் மற்றும் நதியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக, இந்த 300 அணைகளை இடித்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது. பல ஆண்டுகளாக சிவப்பு நதியின் குறுக்கே இருந்த அணைகள் மட்டும் மீன் நிலையங்கள் மீன்களின் இடம் பெயர்வை தடுத்து நீரோட்டத்தை கட்டுப்படுத்தியது.
இதனால் அங்கு வாழும் அரியவகை மீன்களின் இனம் பெருக்கம் பெரிதாக பாதிக்கப்பட்டது மட்டுமின்றி மீன் இனங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனை மீட்டெடுக்கவே சீனா இந்த நடவடிக்கைளில் இறங்கியுள்ளது. சுற்றுச்சுழல் நீர்வள மேலாண்மை உயிரின பாதுகாப்பு போன்ற விசயங்களில் லாபத்தை எதிர்பார்க்காமல் இயற்கையின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சீனாவின் இந்த செயல் உலகநாடுகளுக்கே ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.