* சர்வம் நார்வே மயம்: 11 கோலடித்து வெற்றி
ஓஸ்லோ சிட்டி: அமெரிக்கா, மெக்சிகோவில் அடுத்த ஆண்டு ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் இந்தப்போட்டியின் 6வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிந்தன. அதிலொரு ஆட்டத்தில் நார்வே-மால்டோவா அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நார்வே 11-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. அந்த அணியின் ஹாலண்ட் 5 கோல்களும், ஆஸ்கார்ட் 4 கோல்களும் அடித்து அசத்தினர்.
* மகளிர் உலக கோப்பை நியூசி அணி அறிவிப்பு
கவுகாத்தி: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க உள்ள நியூசிலாந்து பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சோஃபி டெவின் தலைமையில் 14 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சூசி பேட்ஸ் உட்பட பலர் ஏற்கனவே பல உலக கோப்பை போட்டிகளில் விளையாடிவர்கள். இவர்களை தவிர ஃபிரான் ஜோனஸ், லாரன் டவுன், மோலி பென்ஃபோல்ட், ஹன்னசா ரோவ் ஆகிய 4 பேரும் ஐசிசி உலக கோப்பையில் முதல் முறையாக ஆடவுள்ளனர்.
* எஸ்ஏ20 டி20 தொடர் புரூவிசுக்கு ரூ.8.3 கோடி
ஜோகனஸ்பர்க்: எஸ்ஏ20 டி20 தொடருக்கான ஏலத்தில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்டர்கள் டெவால்ட் புரூவிஸ், அய்டன் மார்க்ரம், எஸ்ஏ20 வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. புரூவிசை, பிரெடோரியா கேபிடல்ஸ் அணி, ரூ.8.3 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதற்கு முன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 2022ல், ரூ. 4.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதே, எஸ்ஏ20 வரலாற்றில் அதிகபட்ச ஏல தொகையாக திகழ்ந்து வந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்ரம், ரூ. 7 கோடிக்கு, டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
* மகளிர் பிரிவில் சிந்து சோக கானம்: முதல் சுற்றில் அதிர்ச்சி
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை லைன் ட்ரோஸ்ட் கிறிஸ்போபெர்சன் உடன் மோதினார். முதல் செட்டை, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து வசப்படுத்தினார். இருப்பினும் அடுத்த இரு செட்களிலும் சுதாரித்து அதிரடியாக ஆடிய கிறிஸ்போபெர்சன், 21-16, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை டோமோகா மியாஸாகி, இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயாவை, 21-17, 20-22, 21-14 என்ற செட் கணக்கில் வென்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.