* பிசிசிஐ இடைக்கால தலைவர் ராஜீவ் சுக்லா
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இடைக்கால தலைவராக, தற்போது துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வெளியேறியதை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், செப்டம்பரில் நடக்கவுள்ளது. அதுவரை, ராஜீவ் இடைக்கால தலைவராக இருப்பார். அவர், கடந்த 2015ல், ஐபிஎல் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். தவிர, கடந்த 2020, டிசம்பரில், பிசிசிஐ துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
* பிராட்மேன் தொப்பி ரூ.2.5 கோடிக்கு ஏலம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன், கடந்த 1946-47ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின்போது அணிந்த பச்சை நிறத் தொப்பி, ரூ. 2.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த தொப்பியை, ஆஸ்திரேலியா தேசிய அருங்காட்சியகம் வாங்கி உள்ளது. அதற்கான தொகையில் பாதியை, அந்நாட்டு அரசு வழங்கி உள்ளது. பிராட்மேன் அணிந்த தொப்பி, நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படுவதாக, அந்நாட்டு அமைச்சர் டோனி பர்க் கூறினார்.
* ரோகித் சர்மாவுக்கு உடல் தகுதி சோதனை
மும்பை: ஆஸ்திரேலியாவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள வௌ்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். இந்நிலையில், வரும் செப்.13ம் தேதி, பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சென்டர் ஆப் எக்சலன்ஸ் விளையாட்டு அரங்கில், ரோகித் சர்மாவுக்கு உடல் தகுதி சோதனை நடைபெற உள்ளது. புதிதாக அறிமுகமாகும், பிரான்கோ சோதனையும் நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, கிரிக்கெட் பயிற்சிகளிலும் ரோகித் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.