* ஆஷஸ் தொடரில் திருப்பம் ஆஸி.க்கு கேப்டன் ஸ்மித்?
பெர்த்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் வரும் நவம்பர் 21ம் தேதி பெர்த் நகரில் துவங்க உள்ளன. இந்த போட்டிகளில் ஆஸி அணிக்கு கேப்டனாக உள்ள பேட் கம்மின்ஸ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதற்காக கம்மின்ஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரால், ஆஷஸ் போட்டிகளில் ஆட முடியாமல் போனால், அவருக்கு பதில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். இந்தியாவுடன் இன்று நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரிலும் கம்மின்ஸ் ஆட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
* பாஸ்டன் ஸ்குவாஷ் காலிறுதி அனாஹத் சிங் தோல்வி
புதுடெல்லி: பாஸ்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தேசிய சாம்பியன் அனாஹத் சிங் (17), 2வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சார்லோட் ஸெவை 11-4, 11-6, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் எகிப்து வீராங்கனை ஜனா ஸ்வெய்பி உடன் அனாஹத் மோதினார். முதல் இரு செட்களை 11-4, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் ஜனா கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து வேகமெடுத்து அற்புதமாக ஆடிய அனாஹத் 11-6, 11-3 என்ற புள்ளிக்கணக்கில் அடுத்த இரு செட்களையும் வசப்படுத்தினார். இருப்பினும் கடைசி செட்டை 11-5 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்திய ஜனா, போட்டியில் வெற்றி வாகை சூடினார்.
* உலக ஜூனியர் பேட்மின்டன் இந்திய வீராங்கனை இறுதிக்கு தகுதி
கவுகாத்தி: உலக ஜூனியர் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை தன்வி சர்மா (16), சீனாவின் லியு சி யா உடன் மோதினார். போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய தன்வி, முதல் செட்டை 15-11 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அவரது ஆதிக்கமே காணப்பட்டது. துடிப்புடன் ஆடிய அவர் 15-9 என்ற கணக்கில் அந்த செட்டையும் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற தன்வி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். உலக ஜூனியர் பேட்மின்டனில், அபர்ணா போபட், சாய்னா நெஹ்வாலுக்கு பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 3வது வீராங்கனையாக தன்வி திகழ்கிறார்.