* பிரக்ஞானந்தா-லெவோன் இடையே மீண்டும் டிரா
சா பாலோ: கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ் செஸ் போட்டியில் அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதிய 2வது ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு ரேபிட், 4 பிளிட்ஸ் போட்டிகள் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட உள்ளார். இதற்கிடையே, பிரான்ஸ் வீரர் மேக்சிமே வஷியர் லாக்ரேவ், அமெரிக்க வீரர் ஃபேபியானோ கரவுனா இடையிலான போட்டியும் டிராவில் முடிந்ததால், அந்த போட்டியிலும் வெற்றியாளர், ரேபிட், பிளிட்ஸ் போட்டிகள் மூலம் தீர்மானிக்கப்பட உள்ளார்.
* உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத்
புதுடெல்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டி ஆடவர் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.14 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். முந்தைய போட்டி ஒன்றில் 2.16 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்திருந்த அமெரிக்காவின் ரோடரிக் டவுன்சென்ட், 2.03 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டி வெண்கலம் பெற்றார். துருக்கி வீரர் அப்துல்லா இல்காஸ் 2.08 மீட்டர் உயரம் தாண்டி, வெள்ளிப் பதக்கம் பெற்றார். அது, ஐரோப்பா அளவில், புதிய சாதனையாக அமைந்தது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் 11.95 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
* உலக பாரா தடகளம் தரம்பீருக்கு வெள்ளி
புதுடெல்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பீர் நயின், 29.71 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் செர்பியா வீரர் அலெக்சாண்டர் ராடிசிக் 30.36 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் சூர்மா, 28.19 மீட்டர் தூரம் எறிந்து 5ம் இடமே பிடித்தார். ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அதுல் கவுஷிக் 45.61 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 3ம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றார்.