* தந்தை இறப்பு செய்தியால் நாடு திரும்பிய வெல்லலகே
அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் குரூப் பி-யில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை அணி, நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆடியது. அப்போது, இலங்கை அணிக்காக ஆடிய ஆல் ரவுண்டர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்கா காலமானார் என்ற தகவல் வந்தது. அதை அடுத்து, அன்று இரவே விமானம் மூலம் தன் தாய் நாட்டுக்கு வெல்லலகே திரும்பிச் சென்றார். 22 வயதான வெல்லலகே, சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை ஆடும் போட்டியில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.
* ஆஸி மகளிர் அணிக்கு 10 சதவீதம் அபராதம்
முல்லன்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையே, 2வது ஒரு நாள் போட்டி, முல்லன்பூரில் நடந்தது. அந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, 102 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்காததால் ஆஸி அணிக்கு, போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சர்வதேச நடுவர் குழுவை சேர்ந்த ஜி.எஸ்.லக்ஷ்மி இந்த அபராதத்தை விதித்துள்ளார்.
* பாக். அணி மீது ஐசிசி நடவடிக்கை?
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியின்போது, நடுவர் ஆன்டி பைகிராப்ட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் அணி, மைதானத்துக்கு வர மறுத்தது. அதனால், 1 மணி நேரம் போட்டி தாமதம் ஆனது. இதற்கு இடையில், பாக். அணியினரை பைகிராப்ட் நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பை பாகிஸ்தான் ஊடக மேலாளர் படம் பிடித்துள்ளார். இது, ஐசிசி விதிகளை மீறும் செயல். இதற்காகவும், மேலும் பல விதிமீறல்களில் ஈடுபட்டதற்காகவும், பாக். அணி மீது, ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.