Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில்லிபாயிண்ட்...

* ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் வெற்றி

ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நேற்று, இந்திய வீரர்கள் ஆயுஷ் ஷெட்டி (20), லக்சயா சென் (24) மோதினர். துவக்கத்தில் அதிரடியாக ஆடிய லக்சயா சென், 21-16 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய ஆயுஷ், 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அதை கைப்பற்றினார். தொடர்ந்து, வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் அபாரமாக ஆடிய லக்சயா சென், 21-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதன் மூலம், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

* துலீப் கோப்பை கிரிக்கெட் மத்திய மண்டலம் 235 ரன் முன்னிலை

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெறும் துலீப் கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியில் தெற்கு, மத்திய மண்டலங்கள் மோதுகின்றன. தெற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. அதனையடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய மத்திய மண்டலம் நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த துவக்க ஆட்டக்கார்கள் தனிஷ் மேல்வார், அக்‌ஷல் வடேகர், 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.

இருவரும் முறையே 53 மற்றும் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தோரில் கேப்டன் ரஜத் பட்டிதார், 101 ரன் குவித்து வெளியேறினார். தொடர்ந்து 2வது நாள் ஆட்ட நேர முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட் இழப்புக்கு 384 ரன் எடுத்து, 235 ரன் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் உள்ள யாஷ் ரதோட் 137, சரண்ஷ் ஜெயின் 47 ரன்னுடன் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.

* துப்பாக்கி சுடுதல் போட்டி 3ம் இடத்தில் பவேஷ்

நிங்போ: ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 4ம் நாளில் இந்திய வீரர் பவேஷ் ஷெகாவத், ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் நேற்று களம் கண்டார். சிறப்பாக செயல்பட்ட அவர், 295 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்தார். ஜெர்மன் வீரர் இம்மானுவல் முல்லர், 295 புள்ளிகளுடன் முதலிடமும், பிரான்ஸ் வீரர் கிளமென்ட் பெசகுவிட் 294 புள்ளிகளுடன் 2ம் இடமும் பிடித்தனர். அதனால், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு, பவேஷுக்கு பிரகாசமாக உள்ளது.

* உலக வில்வித்தை கதா கவாகே தோல்வி

லிம் குவாங்ஜு: உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் லிம் குவாங்ஜு நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரீகர்வ் வில் வித்தை மகளிர் பிரிவு போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்திய வீராங்கனை கதா கவாகே (15) பங்கேற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பாரிஸ் ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற கொரியா வீராங்கனை லிம் ஸிஹியோன், அற்புதமாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அதனால், 6-0 என்ற கணக்கில் வென்றார். அதையடுத்து, கதா கவாகே ஏமாற்றத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

* இந்தியா வருகிறார் ரொனால்டோ

புதுடெல்லி: ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த கோவா எப்சி அணியும் ஆடவுள்ளது. டி பிரிவில் கோவா அணியுடன், போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் (சவுதி அரேபியா), பெர்சபோலிஸ் (ஈரான்), அல் துஹைல் (கத்தார்) அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், வரும் அக்.22ம் தேதி கோவாவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் கோவா எப்சி - அல் நசர் அணிகள் ஆடவுள்ளன. இப்போட்டியில் ரொனால்டோ பங்கேற்பார் என்ற செய்தி, இந்திய கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.