* காலிறுதியில் பி.வி.சிந்து
பிரான்சின் பாரிஸ் நகரில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் 4வது நாளான நேற்று காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவு ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து(15வது ரேங்க்), சீனாவின் ஜியி வாங்(2வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் சிந்து 48 நிமிடங்களில் என்ற 21-19, 21-15 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
* அரையிறுதியில் டிஎன்சிஏ தலைவர்
அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முடிந்தன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணிகளில் ஒன்றான டிஎன்ஏசி தலைவர் 11 கடைசி ஆட்டத்தில் சட்டீஸ்கரை 59ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. அதே நேரத்தில் சி பிரிவில் விளையாடிய டிஎன்சிஏ 11 கடைசி ஆட்டத்தில் பெங்காலிடம் 6விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஆனாலும் இரு அணிகளும் தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்த பெங்கால் அரையிறுதிக்கு முன்னேறியது.
* துலீப் கோப்பை
துலீப் கோப்பை டெஸ்ட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரில் நேற்று தொடங்கின. கிழக்கு மண்டலத்துக்கு எதிரான முதல் காலிறுதியில், வடக்கு மண்டல அணி 75.2ஓவரில் 6விக்கெட் இழப்புக்கு 308ரன் எடுத்திருந்த போது மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வட கிழக்கு மண்டலத்துக்கு எதிரான 2வது காலிறுதியில் மத்திய மண்டலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 432ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதார் 125ரன்னில் ஆட்டமிழக்க தனிஷ் மேல்வார் 198ரன்னுடன் இரட்டை சதம் அடிக்க காத்திருக்கிறார்.
* உலக பாரா தடகள அணி
உலக பாரா தடகள போட்டி செப்.27ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. அதற்காக தமிழ்நாட்டின் பாரா வீரர்கள் தங்கவேலு மாரியப்பன், தர்மராஜ் சோலைராஜ், ஆனந்தி குழந்தைசாமி, கீர்த்திகா ஜெயசந்திரன் உட்பட 73பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.