* ஆஸி ஜாம்பவான் சிம்சன் காலமானார்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், உலக கிரிக்கெட் நட்சத்திரமுமான பாப் சிம்சன் (89), முதுமை காரணமாக நேற்று காலை சிட்னி நகரில் காலமானார். ஆஸிக்காக தொடக்க வீரராக 62 டெஸ்ட்களில் 1957 முதல் 1978 வரை, சிம்சன் ஆடியுள்ளார். ஆல்ரவுண்டரான சிம்சன் 10 சதம், 27 அரை சதம் உட்பட 4869 ரன் குவித்துள்ளார். கூடவே சுழல் பந்து வீச்சு மூலம் 71 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார். பாப் சிம்சன் மறைவுக்கு ஐசிசி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் அமைப்புகளும் முந்நாள், இந்நாள் வீரர்களும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
* ஆஸி-இந்தியா மகளிர் ஏ 3வது ஓடிஐயில் மோதல்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் ஆஸ்திரேலியா மகளிர் ஏ - இந்தியா மகளிர் ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா வென்று ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
* துலீப் கோப்பை கிரிக்கெட்: ஆகாஷ் தீப் விலகல்
பெங்களூரு: இந்தியாவில் நடைபெறும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 28ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. மேற்கு மண்டலம், தெற்கு மண்டல கிரிக்கெட் அணிகள், நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. தொடர்ந்து கிழக்கு மண்டலம் - வடக்கு மண்டல அணிகள் முதல் பிளே ஆப்பில் ஆடவுள்ளன. 2வது பிளே ஆப்பில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டல அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், கிழக்கு மண்டல அணியில் இடம்பெற்றிருந்த ஆகாஷ் தீப், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
* ஆடவர் ஒற்றையர் டென்னிஸ்: அல்காரஸ் - ஸ்வெரெவ் அரையிறுதியில் மோதல்
சின்சினாட்டி ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நேற்று, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவை (27), ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22), 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28), அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, இன்று நடக்கும் முதல் அரை இறுதிப் போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், பிரான்ஸ் வீரர் டெரென்ஸ் அத்மேன் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் களமாடுகின்றனர்.