* டிராவிஸ் கெல்ஸ்-டெய்லர் திருமண ஏற்பாடு தீவிரம்
நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த தொழில் முறை கால்பந்தாட்ட வீரர் டிராவிஸ் மைக்கேல் கெல்ஸ், பிரபல பாடகி டெய்லர் அலிசன் ஸ்விப்ட், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். தமது திருமணத்தை 3 நாட்கள் நடத்த முடிவு செய்துள்ள டெய்லர் ஸ்விப்ட், ரோடி தீவில் உள்ள தனது பிரம்மாண்டமான மாளிகையில் திருமண ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான 300 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும், இருவரின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
* தடகளத்தில் அசத்திய லெவ்ரோனுக்கு கவுரவம்
லண்டன்: ஒலிம்பிக் சாம்பியன்களான மான்டோ டூப்ளான்டிஸ், சிட்னி மெக்லாப்லின் லெவ்ரோன், இந்தாண்டின் சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சுவீடனை சேர்ந்த டூப்ளான்டிஸ், நடப்பாண்டில் நடந்த, போல் வால்ட் எனப்படும் தடி ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், அமெரிக்க தடகள வீராங்கனை மெக்லாப்லின் லெவ்ரோன், கடந்த 2 ஆண்டுகளாக, 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியிலும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்து வருகிறார். டோக்கியோவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் லெவ்ரோன், 47.78 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
* மெஸ்ஸி ஆடும் போட்டி ரேவந்த் துவக்கி வைக்கிறார்
ஐதராபாத்: இம்மாதம் இந்தியா வருகை தரும் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான், வரும் 13ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அது பற்றிய முடிவுகள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியின் 2ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த போட்டி, ஐதராபாத்தில் உள்ள உப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

