ஈரோடு : குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இதில், மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்துக் கொண்டு குழந்தைகள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதில், குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், சட்டப்படி குழந்தைகளை அடிப்பது குற்றமாகும், ஒவ்வொரு குழந்தையும் நம்முடைய பொறுப்பு என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, பள்ளி மாணவர்கள், அதிகாரிகள் என பலரும் பேரணி சென்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, சம்பத் நகர் வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே நிறைவடைந்தது. தொடர்ந்து, குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் கந்தசாமி வாசிக்க, அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
அதன்பின், மாவட்ட கலெக்டர் கந்தசாமி, குழந்தைகள் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், கையெழுத்திட்டு குழந்தைகள் தின விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் கந்தசாமி பரிசுகளை வழங்கினார். குழந்தைகள் நலத்துறையின் சார்பில் செயல்படும் இல்லங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புகளை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முகமது குதுரத்துல்லா, செல்வராஜ் (வளர்ச்சி), குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஷ்வரி, மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் தினேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


