12 குழந்தைகள் பலி எதிரொலி கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஆய்வு: கேரளாவிலும் தடை விதிப்பு
திருவனந்தபுரம்: ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் 12 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, 6 மாநிலங்களில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (சிடிஎஸ்சிஓ) ஆய்வு நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. மபி, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 12 குழந்தைகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மருந்தை குடித்த 1400 குழந்தைகள் ராஜஸ்தானில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். குழந்தைகள் பலியானதை தொடர்ந்து 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்து வழங்க ஒன்றிய அரசு தடை விதித்தது.
மேலும், மபி அரசின் கோரிக்கையை அடுத்து, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையத்தில் மருந்தின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில், அந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுப்பணிகளை நேற்று தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மபி, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி மையங்களிலும் இந்த ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
மருந்தின் தரம் மோசமாக மாறியதற்கான காரணத்தை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கவே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், சிடிஎஸ்சிஓ மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு, மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு பல்வேறு மாதிரிகள் மற்றும் காரணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், மபி, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் இந்த மருந்துக்கு அம்மாநில அரசு நேற்று தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.