Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நலிவடைந்தோரின் குழந்தைகள் பயன்பெற ஆர்டிஇ சட்டத்தில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும்

*தனியார் பள்ளி நலச்சங்கத்தினர் வேண்டுகோள்

செம்பனார்கோயில் : நலிவடைந்தோரின் குழந்தைகள் பயன்பெற ஆர்டிஇ சட்டத்தில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நலிவடைந்த பெற்றோர்களின் குழந்தைகள் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி உரிமை சட்டம் (ஆர்டிஇ) கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் பயன்பெற முன்பு தகுதி உடைய பெற்றோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து, அதன் மூலமாக பள்ளிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு அதனடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் ஏராளமான நலிவடைந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஜூன் மாதம் முதல் பள்ளிகளில், மாணவர்களை ஆர்டிஇயில் சேர்க்க விருப்பமுள்ள பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளிகள் மூலமாகவே அதனை அனுப்பி, குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆர்டிஇ தொடர்பாக தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிஇ சட்டத்தை அமல்படுத்த நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்.தற்போது சொல்லப்பட்டுள்ள நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அனைத்து பெற்றோரும் இதற்கு விருப்பம்தான் தெரிவிப்பார்கள்.

அப்படியெனில் உண்மையான பயனாளிகளுக்கு இந்த சட்டத்தின் பயன் கிடைக்காமல், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பாக இது மாறிவிடும். நலிவடைந்தோர்களின் பிள்ளைகள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டம், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடியதாக மாறிவிடும். எனவே தமிழ்நாடு அரசு இதனை பரிசீலித்து ஆர்டிஇ சட்டத்தின் மூலம் பழைய நடைமுறையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.

மேலும், இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 2023-24 ஆண்டுக்கான சுமார் ரூ.494 கோடியும், 2024-25-ம் ஆண்டுக்கான சுமார் ரூ.470 கோடியும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான நிலை என்னவென்று தெரியவில்லை. ஆர்டிஇ மூலம் சேர்க்கையை தொடங்குவதற்கோ, அரசின் உத்தரவை பின்பற்றுவதற்கோ நாங்கள் 100 சதவீதம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் கடந்த ஆண்டுகளுக்கு உரிய தொகை எப்போது எங்களுக்கு வழங்கப்படும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.மேலும், இதுவரை கொடுக்க வேண்டிய தொகையை வட்டியோடு சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அரசு இந்த நிலுவை தொகையை வழங்காத காரணத்தால் பல்வேறு பள்ளிகள் மூடக்கூடிய சூழலில் உள்ளன. தனியார் பள்ளிகளையும் அரசு காப்பாற்ற வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உடனே தலையிட்டு. கல்வித்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோர் பள்ளி தாளாளர்களை சந்தித்துப்பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.