பெற்றோர்களே கவனத்திற்கு.. குழந்தைகள் 7 வயதைக் கடந்த பிறகு ஆதார் புதுப்பிக்க வேண்டும்: ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்!!
சென்னை: 5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும். பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய மக்களின் தனிநபர் அடையாள அட்டை மிக முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை திகழ்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் அட்டை முக்கியமாக கருதப்படுகிறது. அதற்கேற்ப பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் 5 வயதைக் கடந்த குழந்தைகள் தங்கள் ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்கத் தவறினால், அவை முடக்கப்பட வாய்ப்புள்ளது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. அதில், 5 முதல் 7 வயதுடைய குழந்தைகளை அருகில் உள்ள சேவை மையங்கள், தபால் நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கபப்ட்ட ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்றும், 7 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி இணைக்காவிட்டால் ஆதார் அட்டை செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிப்பு தொடர்பாக குழந்தைகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.