இந்தூர்: மத்திய பிரதேச மருத்துவமனையில் எலி கடித்ததில் அடுத்தடுத்து 2 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மபி மாநிலத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்தூர் மகாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை கடந்த 31 ம் தேதி நள்ளிரவு எலி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த இரு குழந்தைகளையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இன்னொரு குழந்தையும் நேற்று உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தைகள் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைகள்.
இந்த சம்பவம் பற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜிதேந்திர வர்மா கூறுகையில்,‘‘ இரண்டாவதாக இறந்த குழந்தை பிறக்கும் போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறந்துள்ளது. சமீபத்தில் தான் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எலி கடித்ததில் 2 கைவிரல்களில் காயம் ஏற்பட்டது. எலி கடித்ததால் ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் கேட்டு கொண்டதற்கிணங்க பிரேத பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படாமல் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது என்றார்.
மகாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் எலிகள் அங்குமிங்கும் ஓடும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இது பற்றி விசாரிக்க உயர் நிலை குழுவை அமைத்துள்ளதாக மாநில துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா தெரிவித்துள்ளார்.