Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமில்லை என்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி

* சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்திருந்தார்.

* இதை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

* ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு தவறானதாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

புதுடெல்லி: சிறார் ஆபாச படங்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தவறு செய்து விட்டார் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமே என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘‘சம்பந்தப்பட்ட இளைஞரை ஆஜராகச் சொல்லி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ அதேபோன்று 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து இதுசம்பந்தமாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவானது மிகப்பெரிய சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீநிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ”ஆபாச படம் விவகாரத்தில் ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்று கூறி உத்தரவை பிறப்பிக்க முடியும். இது மிகவும் கொடுமையான ஒன்றாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் குற்றவாளியின் மனநிலையை தடுப்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. குறிப்பாக குற்றமற்ற மனநிலையின் அனுமானத்தால் தொடர்புடைய அனைத்து விதிமுறைகளையும் விளக்கும் விதமாக நாங்கள் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளோம். ஒரு குற்றத்தை உருவாக்க, சூழ்நிலைகள், அத்தகைய பொருளை பகிர அல்லது மாற்றுவதற்கான நோக்கத்தை குறிக்க வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை உருவாக்க சில ஆதாயங்கள் அல்லது பலன்கள் பெறப்பட்டதாக காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இதுபோன்ற செயல்பாடுகளுக்கு போக்சோ சட்ட விதி எஸ்.15(2)ன் படி குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் சமூகத்தின் பங்கு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக சிறார் ஆபாச படங்கள் என்ற பெயரை இனிமேல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக சிறார் பாலியல் சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகம் என்று மாற்றுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். அதற்கான கோரிக்கையை குழந்தைகள் உரிமைக்கான அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு தவறானதாகும். நாங்கள் அதனோடு ஒத்துப்போகவில்லை. எனவே அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.

மேலும் சம்பந்தப்பட்ட இளைஞர் மீதான வழக்கு நடவடிக்கைளையும் தொடர வேண்டும். சிறார் ஆபாச படத்தை தங்கள் செல்போனில் வைத்திருப்பது, பார்ப்பது போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் குற்றமே என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது மீண்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.