குழந்தைகளை இளம் வயதிலேயே சாதனையாளராக மாற்றுவது ஒன்றும் சாதாரண விஷயங்களில்லை. அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதைக் கண்டறிந்து அதைப் பயிற்றுவிப்பது மட்டும் தான் ஒரு நல்ல பெற்றோரின் கடமை. ஒளி அவர்களுக்குள்ளேயே இருக்கிறது, அதை அணையாமல் காத்து திரியை ஏற்றி வைப்பது மட்டுமே நமது பணி என்கிறார்கள் ஆறு வயது சாதனை சிறுவன் கேப்ரியோ அக்னியின் பெற்றோர்கள். குழந்தைகளிடம் மொபைல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று போராடாத பெற்றோர்கள் இன்று இல்லை. ஆனால் மூன்று வயது முதல் தூரிகையை கையில் பிடித்திருக்கிறான் இந்த சாதனை சிறுவன் கேப்ரியோ அக்னி. வெறும் ஆறே வயதில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளான் சிறுவன் கேப்ரியோ அக்னி. சென்னையைச் சேர்ந்த கேப்ரியோ அக்னி ஹோலி ஃபேமிலி பள்ளியில்2 ஆம் வகுப்பு படித்து வருகிறான். மூன்று வயது முதலே சின்ன சின்னப் பொருட்களை வரையத் தொடங்கிய போதே பெற்றோர் அவனது ஆர்வத்தை கண்டறிந்துள்ளனர். மற்ற குழந்தைகளைப் போல ரீல்ஸ் பார்ப்பதிலோ, ரைம்ஸ் பார்ப்பதிலோ ஆர்வமில்லை கேப்ரியோவிற்கு. மாறாக ஓவியங்களை வரைவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை மட்டுமே ஆர்வமாகப் பார்த்து சுயம்புவாகவே பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்த ஆரம்பித்தான் சிறுவன் கேப்ரியோ.
எதைப் பார்த்தாலும் அதை அப்படியே வரைந்து விட வேண்டும் என்கிற ஆர்வம் நவீன ஓவிய முறைகளை வரைவதற்கு கேப்ரியோவிற்கு உந்துதலாக மாறியுள்ளது. பென்சில் ஓவியம் வரைய ஆரம்பித்து, காந்தம் வைத்து ஓவியம் வரைவது, பெண்டுலம் வைத்து ஓவியம் வரைவது என புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் தீரா ஆர்வம் கொண்டவர். பெயிண்டிங்கில் 28 விதமான டெக்னிக்ஸில் வரையக்கூடியவன். கேப்ரியோ பள்ளி அளவிலான ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி, வெளியிடங்களில் எங்கெல்லாம் ஓவியப் போட்டிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று கலந்து கொள்வது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் வேல்ஸ் குளோபல் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து பத்தாயிரம் ரூபாய் பரிசு வென்றுள்ளான் கேப்ரியோ.
சவால்கள் சாதனைகள்...
உலக சாதனை போட்டியில் பங்கேற்கும் போது மூன்று நாட்கள் ஓவியம் வரையும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், நாள் முழுக்க பெயிண்ட் வாசத்தில் நின்றிருந்ததால் , அடுத்த நாள் மதியம் காய்ச்சல் வர போட்டியை விட்டு வெளியேறி விடலாம் என கேப்ரியோவின் பெற்றோர் முடிவு செய்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மூன்றாம் நாளோ இல்லை இன்று நான் கலந்து கொள்கிறேன் என்ற தன்னம்பிக்கையோடு கலந்து கொண்டு சவாலை பெரும் சாதனையாக மாற்றிய பெருமையும் , தன்னம்பிக்கையும், மனோதிடமும் இந்த சின்னஞ்சிறு வயதிலேயே கேப்ரியோவிற்கு உண்டு.
பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள்...
புதிய முறையில் பல ஓவியங்களை வரைந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட இந்த குட்டி ஓவியர் இதுவரை 15 உலக சாதனைகளைப் படைத்துள்ளான். ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றுள்ள அச்சிறுவன் எந்த ஒரு பயிற்சி வகுப்பிற்கும் செல்லாமலே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளான் என்பது ஆச்சர்யமான ஒன்று. இந்திய உலக சாதனைப் புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், லண்டன் உலக சாதனைப் புத்தகம் என பல்வேறு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான் கேப்ரியோ அக்னி. இதுவரை 50 க்கும் மேற்பட்ட பரிசுகளாலும், மெடல்களாலும் அவனது வீட்டை நிறைத்திருக்கிறான். சாதனை சிறுவன் என்கிற கேட்டகிரியில் அறம் விருதினை வென்றுள்ளான். அப்துல் கலாம் விருதும் கிடைத்துள்ளது. தற்போது கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் பங்கு பெறுவதற்கான முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் செய்துவருகிறான்.
இந்த சாதனை ஓவிய ஆர்வம் கொண்ட சிறுவனுக்கு ரோல் மாடல் என்றெல்லாம் யாரும் கிடையாது. சுயமாக வரைய ஆரம்பித்த கேப்ரியோவை தற்போது தான் முறையான ஓவிய பயிற்சி வகுப்பில் சேர்த்திருக்கின்றனர் அவனது பெற்றோர் பாலு மற்றும் ஜாஸ்மின். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இந்த சாதனை சிறுவனின் தந்தை பிஸினஸ் செய்து வருகிறார். தாயார் ஜாஸ்மின் தனி கவனிப்புக் கொடுத்து கேப்ரியோ அக்னியை சாதனை சிறுவனாக மாற்றியுள்ளார். நடிகர் விஜயின் ரசிகரான கேப்ரியோவின் தற்போதைய ஒரே ஆசை அவரை தத்ரூபமாக வரைந்து அவருக்கே பரிசளிக்க வேண்டும் என்பது தான். தற்போது முறையான ஓவிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளான். கேப்ரியோவின் இத்தனை சாதனைகளுக்கும் தந்தை தாய் மட்டுமில்லாமல் , அவனது உறவினர்களும் குடும்பத்தினரும் மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். எதிர்காலத்தில் ஒவியத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற ஆசையும் லட்சியமும் அதிகமாக இருக்கிறது சிறுவன் கேப்ரியோ அக்னிக்கும் அவனது பொற்றோருக்கும். சாதனை சிறுவன் கேப்ரியோ அக்னியின் கனவுகள் நனவாகி ஓவியத்துறையில் மென்மேலும் சாதிக்க வாழ்த்தி விடை பெற்றோம்.
- தனுஜா ஜெயராமன்