Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வரின் துரித முயற்சி

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக சந்தையை சார்ந்திருக்கின்றன. இவற்றில், பெரும்பாலான நாடுகள் அமெரிக்க சந்தையை நம்பி, வர்த்தக உறவு கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று, 2வது முறை அதிபரான டொனால்டு டிரம்ப், வர்த்தக உறவு கொண்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் கூடுதல் வரி விதிப்பு மேற்கொள்ள இருப்பதாக அதிரடியாக அறிவித்தார். இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கனடா என எல்லா நாடுகளுடனும் வர்த்தக வரி விதிப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்துவிட்டால், இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும். அதனை நோக்கியே டிரம்ப் காய்களை நகர்த்தி வருகிறார். இதற்கு மாற்று ஏற்பாடாக நம் நாடு விழித்துக்கொள்ள வேண்டும். ரஷ்யா, சீனாவுடனான வர்த்தக உறவை இன்னும் மேம்படுத்தி, தற்காத்துக் கொள்வதோடு, தற்சார்பு பொருளாதார இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய நெருக்கடியை இந்தியா சந்தித்திருக்கிறது.

அமெரிக்கா வரி விதிப்பால் அதிக பாதிப்பை தமிழ்நாடு சந்திக்க நேரிடும் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். காரணம், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 52.1 பில்லியன் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இவற்றில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. ஜவுளி, முட்டை, இயந்திரங்கள், ஆட்டோ மொபைல்ஸ், நகை, ரத்தின கற்கள், தோல் காலணிகள், கடல் சார்ந்த பொருட்கள், ரசாயன பொருட்கள் போன்றவை அமெரிக்க சந்தைக்கு அதிகளவு செல்கிறது.

இவற்றிற்கு தற்போது 25 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அடுத்து டிரம்பால் அறிவிக்கப்பட்ட மேலும் 25 சதவீதம், அதாவது 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டால், தமிழகத்தில் தொழில்துறை கடும் பாதிப்பை சந்திக்கும். இந்த வர்த்தக பாதிப்பை தவிர்க்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல் ஆளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால், தமிழக தொழில்துறை பாதிப்படைவதில் இருந்து மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு தருகிறது.

ஜவுளித்தொழிலையும், உலக வர்த்தகத்தையும் மீட்டெடுக்க நடவடிக்கை தேவைப்படுகிறது.இதில், ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீத அடுக்கில் ஜவுளியை கொண்டு வருதல், அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல், சுங்கவரி சுமையை குறைக்க சிறப்பு வட்டி மானியம் வழங்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். அத்துடன் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டதை போன்று ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் அசலை திருப்பி செலுத்துவதில் சலுகை அடங்கிய சிறப்பு நிதி நிவாரண தொகுப்பை கொண்டு வர வேண்டும். பிரேசில் நாடு, அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு, வரிசலுகை அறிவித்திருப்பது போன்று, இந்தியாவிலும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார். நம் முதல்வரின் இந்த துரித முயற்சி, தமிழகத்தின் வர்த்தகத்தை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.