முதலமைச்சர் கோப்பை பளுதூக்குதல் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த 2025 முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 88 கிலோ உடல் எடை பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பதக்கம் அணிவித்து, பரிசுத்தொகை காசோலை, சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான பளுதூக்குதல் விளையாட்டு போட்டியில் 98 கிலோ உடல் எடை பிரிவில் வீரர்கள் பளுதூக்குவதை பார்வையிட்டு, கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.
மேலும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் உதயநிதி ஸ்டாலின் உணவு அருந்தினார். போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகளிடம் விளையாட்டு போட்டிகளின் ஏற்பாடுகள், பங்கேற்பு குறித்து துணை முதல்வர் கலந்துரையாடினார். அப்போது, வீராங்கனைகள் துணை முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.