சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த முக்கிய திருத்தங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1) வக்புக்கு சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தை கட்டாயமாக நடைமுறையில் கடைபிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்கு இடைக்கால தடை.
2) வக்பு நிலம் அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தை பறிக்கும் அதிகாரத்துக்கு இடைக்கால தடை.
3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சி தலைவருக்கான அதிகாரத்துக்கு இடைக்கால தடை (நீண்டகால மத பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாக கருதப்படும் சொத்து) 4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பதற்கு இடைக்கால தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும். ஒன்றிய பாஜ அரசு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாக செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, திமுக எதிர்த்து வந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பாஜவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகள், அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.