Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ரூ.20.89 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.20.89 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள், புழல் - மேட்டுபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம், என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்; ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலை பள்ளிகளில் 10.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 வகுப்பறைகள், பல்நோக்கு கூடம், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகம், ஆசிரியர் அறைகள், அலுவலகம், நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பள்ளிக் கட்டடங்கள்; கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 4.47 கோடி ரூபாய் செலவில், 4,100 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கான 6 குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள்; புழல், மேட்டுபாளையம், சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானத்தில், 4.27 கோடி ரூபாய் செலவில், பார்வையாளர்கள் இருக்கை பகுதி, வீரர்களுக்கான அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம்; சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் உள்ள சிறிய கால்பந்து மைதானத்தில் 1.29 கோடி ரூபாய் செலவில், பார்வையாளர்கள் இருக்கை பகுதி, வீரர்களுக்கான அறை மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம்; என மொத்தம் 20 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.