Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2025) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை. வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், 53 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார்.

* கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்

கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தினை சார்ந்து வாழ்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 26.06.2021 அன்று கொளத்தூரில் வண்ண மீன் உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து, வண்ண மீன் வர்த்தகத்தினை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவும். சந்தைப்படுத்துதலுக்கான தேவைகள் குறித்தும் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதனடிப்படையில், வண்ண மீன் வர்த்தகத்தினை பெரிய அளவில் மேம்படுத்திடவும், கொளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தினை உலக அளவில் கொண்டு சென்றிடவும், தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகத் தரத்திலான பிரத்தியேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்புடன், சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 26.08.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டர் கட்டடப் பரப்பளவில் 53 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் (G+2) மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் கட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும். வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வண்ண மீன் வர்த்தக மைய கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

* கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தின் சிறப்பம்சங்கள்

வண்ண மீன் வர்த்தக மையத்தின் தரைத் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 48 கடைகள், 30 சதுர மீட்டர் பரப்பளவில் 5 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 11 கடைகள், என மொத்தம் 64 கடைகளும், 150 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு அலுவலகம், 2 உருளை வடிவ மீன்காட்சியகம், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள். 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 58 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 12 கடைகள், என மொத்தம் 70 கடைகளும், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இரண்டாம் தளத்தில் 20 சதுர மீட்டர் பரப்பளவில் 46 கடைகள், 21 முதல் 37 சதுர மீட்டர் பரப்பளவில் 8 கடைகள், என மொத்தம் 54 கடைகளும், 325 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு உணவகம், 16 ஆண்களுக்கான கழிப்பறைகள், 8 பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தில் 3 மின்தூக்கிகள், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ் நிலை நீர்தேக்க தொட்டி. 45,000 லட்சம் லிட்டர் கொள்ளவுடன் 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 200 இரண்டு சக்கர வாகனங்களும். 188 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தில், மொத்த மற்றும் சில்லறை வண்ண மீன்கள் விற்பனை செய்வதற்காக 185 கடைகள், ஆய்வகம், பயிற்சிக் கூடம், உணவு அரங்கம். பார்வையாளர் அரங்கம் ஆகிய வசதிகளுடன் வண்ண மீன் உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் ஏற்றுமதியாளர் ஆகியோருக்கான சந்திப்பு மையமாக கட்டமைக்கப்பட்டுள்ளது

சென்னையின் புதிய அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், இப்பகுதியில் வண்ண மீன் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து, நாட்டிற்கே முன் மாதிரியாக அமையும்