Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

49வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து

* அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை

* அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து

* தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நல உதவிகள்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். உதயநிதிக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 49வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்று, தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, உதயநிதிக்கு சால்வை அணிவித்து, உச்சி முகர்ந்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். புத்தகம் பரிசாக வழங்கினார்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகள், மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து குறிஞ்சி இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சி.வி.கணேசன், கோவி.செழியன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், எம்.கே.மோகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ரெ.தங்கம் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, தனது பாட்டி தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் வீட்டுக்கு சென்று, செல்வியிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து, சி.ஐ.டி.நகரில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். அப்போது, கனிமொழி எம்பியும் வாழ்த்து தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும்ம், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுகவினர் வழங்கினர். இதே போல மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

* வெல்வோம் 200, படைப்போம் வரலாறு

பெரியார் திடலில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,‘தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன். மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அடுத்த 4 மாதங்கள் களத்தில் வேலை பார்க்க வேண்டும். எஸ்ஐஆர் திட்டம் போய் கொண்டிருக்கிறது. அதில் உங்களுடைய வாக்குகளை முதலில் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வாக்குகளை எல்லாம் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அந்த பணியிலேயே பி.கே.சேகர்பாவின் சென்னை கிழக்கு மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் 4 மாத காலம் மிக, மிக முக்கியமான காலம். நம்முடைய டார்க்கெட் தலைவர் சொன்னது போல வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்பது தான். அதை என் பிறந்தநாள் வேண்டுகோள் செய்தியாக வைத்து, அந்த 200 தொகுதிகளில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலேயும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி, வெற்றி என்பதை வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு,’என்றார்.

மக்களின் அன்புக்குரியவனாக திகழ வேண்டும்: முதல்வர் அறிவுரை

கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இளைஞரணிச் செயலாளராக-விளையாட்டுத் துறை அமைச்சராக-துணை முதல்வராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல, தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!. திமுகவின் தலைமை தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலை தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.