சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமை செயலகம் வருகிறார். பல்வேறு திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான தலைசுற்றல் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மாவட்ட கலெக்டர்களிடமும் ஆலோசனை நடத்தி, மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசு பணிகளை மேற்கொண்ட அவர் கட்சி பணிகளையும் கவனித்தார். திமுக மண்டல பொறுப்பாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் கொடுத்து அனுப்பி இருந்தார்.
உடல்நிலை சரியானதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி முதல்வரிடம் கேட்டுக் கொண்டனர். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்லவில்லை. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமை செயலகம் செல்கிறார். முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு பின்பு அவர் தலைமைச் செயலகம் வந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முதல்வர் 3ம் தேதி தூத்துக்குடி பயணம்
கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.