முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்பு: ஆயிரக்கணக்கான ஆண்-பெண் காவலர்கள் பங்கேற்பு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் காவலர்கள் பங்கேற்றனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், “முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.
அதன்படி, முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ‘காவலர் நாள் விழா 2025’-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை வாசிக்க, போலீஸ் உயர் அதிகாரிகள், காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
“இந்திய அரசியலமைப்பின் பாலும், தமிழ்நாடு காவல் துறையின், உயரிய நோக்கங்களின் பாலும், நான் உண்மையான ஈடுபாடும், உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று, மனமாற உறுதி கூறுகிறேன். எந்தவித அச்சமோ, விருப்பு வெறுப்போ இன்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும், நியாய உணர்வுடன் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்” என்று முதல்வர் வாசிக்க வாசிக்க அனைத்து காவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.மேலும், காவலர் நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற காவலர் குடும்பங்களை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கடராமன் பேசியதாவது:செப்டம்பர் 6ம் தேதி ‘காவலர் நாள்’ நமது தமிழ்நாடு முழுவதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அதை நாம் சரியாக கொண்டாடுகிறோமா? என்று முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது கேட்டு அறிந்தார். பின்னர் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து வந்தவுடன் காவலர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று முதல்வர் கூறியிருந்தார். நமது உறவுகளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு தினங்களான அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், சகோதரர்கள் தினம், சகோதரிகள் தினம் என்று பல்வேறு தினங்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் அவரவர் தொழில் சார்ந்த தினமாக தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், ஆசிரியர்கள் தினம், மருத்துவர்கள் தினம், பொறியாளர்கள் தினம், செவிலியர்கள் தினம் கொண்டாடுகிறார்கள். மனிதர்களை நோய் நொடிகளில் இருந்து காப்பதற்காகவும், அவர்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சர்க்கரை நோய், புற்றுநோய், சாசநோய், இருதய நோய், புகையிலை ஒழிப்பு தினம் என்று அனுசரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகில் இவ்வாறு பல சிறப்பு தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், மக்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் இரவு பகல் பாராமல் அயராத உழைக்கும் தமிழ்நாடு காவலர்களுக்கு அப்படி ஒரு நாள் கொண்டாடுவதற்கு இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை உணர்ந்து நமது முதல்வர், தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் என்று நடைமுறைக்கு வந்ததோ அன்றைய தினத்தை, அதாவது செப்டம்பர் 6ம் தேதி (நேற்று) ‘காவலர் நாளாக’ அறிவித்தது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும். இந்த அறிவிப்பு காவல்துறை வீரர்களின் உழைப்பு மற்றும் தியாகத்திற்கு அங்கீகாரம் அளிப்பதுடன், அவர்களின் மன உறுதியை பல மடங்கு உயர்த்தி தங்கள் பணிகளை இன்னும் நல்ல அர்ப்பணிப்புடன் செய்ய அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.
காவலர் நாளை பெருமைக்குரிய நாளாக அறிவித்து காவல்துறையின் வீரர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கியதற்காக, நமது முதல்வருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தங்களின் வழிகாட்டுதலின்படி பெருமை மிகு தமிழ்நாடு காவல்துறை தனது கடமைகளை உறுதியுடன் செயல்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.முதல்வர் தலைமையில் மைதானத்தில் நடைபெற்ற காவலர் நாள் விழாவில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
* முதல்வரின் எண்ணத்துக்கு காவல்துறை உறுதுணையாக இருக்கும்: அருண்
காவலர் நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் பேசியதாவது: 1859ம் ஆண்டு ‘மெட்ராஸ் மாநகர காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள், இனி ஆண்டுதோறும் ‘காவலர் நாளாக’ கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவித்த பிறகு வரும் முதல் செப்டம்பர் 6ம் தேதி என்பதால், நமது காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து ஓவிய போட்டி, விளையாட்டு போட்டி, துப்பாக்கி சுடும் பயிற்சி, ரத்ததான முகாம், மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தினர். காவலர் நாளான இன்று முதல்வர் தம்முடன் இணைந்து காவலர் நாள் உறுதி மொழி ஏற்று, இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
அவரை இந்த நிகழ்ச்சியில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். திருவள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப கலைஞரின் வழிகாட்டுதலின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பது, போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவது, பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பணிகளில் சீரிய கவனம் செலுத்தி நமது முதல்வர், நமது தமிழ்நாடு காவல்துறையை வழிநடத்தி கொண்டு இருக்கிறார். தமிழக முதல்வர் எப்போதும் சொல்வதுபோல், குற்றங்களே நடக்காத மாநிலமாக தமிழகத்தை மாற்றி தலைசிறந்த மாநிலமாக முன்நிறுத்த வேண்டும் என்ற அவரது நோக்கத்திற்கு தமிழக காவல்துறை என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.