Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தி காலமானார்: பெசன்ட் நகரில் இன்று மாலை இறுதிச்சடங்கு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தி வேதமூர்த்தி சென்னையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81). நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் இவரது சொந்த ஊர். வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை, ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். வேதமூர்த்தியின் உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி, 2வது குறுக்கு தெரு, பிளாட் எண். சி-15 என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.

இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் சென்னை, பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடக்க உள்ளது. வேதமூர்த்தி மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ எனது மருமகன் சபரீசனின் தந்தையார் வேதமூர்த்தி மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வேதமூர்த்தியின் மறைவு ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசனுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,’என்றார்.