சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எஸ்.எஸ்.கதிரவன் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக எம்எல்ஏவாக இருந்தவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் சமீபத்தில் முதல்வரை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவரது ஏற்பாட்டில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.எல்.நாராயணன், அமைப்புச் செயலாளர் சௌ.ராதா ஆகியோர் தலைமையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர் வீ.ஜெயக்குமார், நாங்குநேரி தொகுதி முன்னாள் செயலாளர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் நெல்லை மாநகர் பகுதிச் செயலாளர் சிவஅருணா. அருண்குமார், நெல்லை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சாந்தகுமார் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் அப்துல் வகாப், திருநெல்வேலி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கிரகாம்பெல், ஆலங்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் உடனிருந்தனர்.


