முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு: இரண்டு நாளில் 3 முறை சந்தித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் நேற்று மீண்டும் சந்தித்து பேசினார். கடந்த இரண்டு நாளில் 3 முறை முதல்வரும், ஓபிஎஸ்சும் தனியாக சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்த பிறகு, பாஜ கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ மேலிட தலைவர்கள் புறக்கணித்து வந்தனர். கடந்த வாரம் சனிக்கிழமை இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் கட்சி சென்னையில் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு பாஜக தலைவர்களை மட்டுமல்ல, அதிமுக தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் காலை, சென்னை அடையாறு அருகே உள்ள தியோசபிக்கல் சொசைட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், நான் நடைபயிற்சி மேற்கொண்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டோம் என்று கூறி இருந்தார். ஆனால், அதையும் தாண்டி அரசியல் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்தித்து நேற்று முன்தினம் காலை சந்தித்து பேசிய சம்பவம் பல்வேறு யூகங்களை கிளப்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மாலை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பு, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்தது. இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த நிலையில், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கே சென்று ஓபிஎஸ் சந்தித்தது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்புக்கு பின் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை” என்று கூறினார். இந்த பரபரப்பான நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலையில் மீண்டும் சந்தித்து பேசினார். நேற்று காலையில் அடையாறு தியோசோபிகல் பூங்காவில் முதல்வர் நடைபயிற்சி மேற்கொண்டபோது ஓபிஎஸ்-சும் அங்கு வந்து நடைபயிற்சி செய்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஓபிஎஸ்சும் சுமார் 15 நிமிடங்கள் ஒன்றாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்றபடியே பேசினார்கள். அப்போதும், அரசியல் பற்றி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களில் 3வது முறையாக சந்தித்து பேசி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஓபிஎஸ் இரண்டு நாட்களில் 3 முறை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் வரும் நாட்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.