முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கரூர் நகரமே குலுங்கியது: வரலாறு காணாத வகையில் 2.50 லட்சம் தொண்டர்கள், 1 லட்சம் மகளிர் பங்கேற்பு
சென்னை: 75 ஆண்டுகால தியாக வரலாறுகளுடன் கரூர் மாநகரில் நடந்த முப்பெரும் விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்களும், ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிரும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு கட்டியம் கூறுவது போல் எழுச்சியுடன் கூடினர். கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் வரலாறு காணாத வகையில் 1 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டன. ஆனால், இடம் போதாமல் மைதானத்திற்கு வெளியே 1 லட்சத்து 50 ஆயிரம் லட்சம் தொண்டர்களும், பொதுமக்களும், கழக முன்னணியினர் தலைமை கழக, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், சிற்றூர் கழக கிளைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு உரிமைகளை காப்பதை உன்னத லட்சியமாக கொண்டு தொடங்கப்பட்ட திமுக, வெள்ளி விழா - பொன் விழாக்களை கொண்டாடி 75 ஆண்டுகள் கடந்து பவள விழாவையும் நடத்தி - 75 ஆண்டுகளில் இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் ஜனநாயக பாடம் கற்பித்து எக்கு போல் உறுதியாக நிற்கும் ஒப்பற்ற புகழை குவித்துள்ளது. 1974 முதல் நடந்து வரும் முப்பெரும் விழாவில், 1985 முதல் கழக வளர்ச்சியில் விழுப்புண்கள் ஏற்று முத்திரைகள் பதித்து தொண்டாற்றியுள்ள மக்களுக்கு விருதுகள் வழங்கி போற்றும் மரபுகள் தொடங்கியது.
அதே வழியில் இந்த ஆண்டின் முப்பெரும் விழாவிலும், பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாரதிதாசன் விருது, திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயர்களிலான விருதுகளுடன் முரசொலி செல்வம் பெயரிலான விருதும், மண்டலம் வாரியாக சிறப்பாக செயல்படும் 50 நிர்வாகிகளுக்கு உத்வேகமூட்டும் விருதும் லட்சோப லட்சம் தொண்டர்களின் முன்னிலையில் நேற்று முன்தினம் கரூர் விழாவில் வழங்கப்பட்டு பாராட்டுரைகள் அளிக்கப்பட்டன. முன்னணி தலைவர்கள் உரையாற்றியபின், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார்.
அப்போது, “2019ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். சாதாரண வெற்றி அல்ல எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம் 2026ம் ஆண்டிலும் நிச்சயம் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். நான் பெருமையுடன் சொல்கிறேன். இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. எந்த இயக்கத்திலும் உங்களை போன்ற கொள்கை உணர்வுடைய தொண்டர்கள் இருக்க மாட்டார்கள்.
இப்படி கடுமையாக உழைக்கவும் மாட்டார்கள். கழகம் நம்மைக் காத்தது. நாம் கழகத்தை காக்க வேண்டும் என்று உழைக்கும் உங்களை போன்ற உடன்பிறப்புகள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. உங்களுக்கு தலைமை தொண்டனாக இருப்பது என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 100 அடி கொடிமரம் நிறுவப்பட்டு அதில், திமுக கொடி பட்டொளி வீசி பறந்தது அனைவரையும் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் முதல்வரை புதுவகையான வாண வேடிக்கைகளுடன் தொண்டர்கள் வரவேற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தேர்தலில் திமுக புதிய தேர்தல் வரலாறு படைக்கும் என முதல்வர் தெரிவித்தபோது பொதுமக்கள் மிகப்பெரிய ஆரவாரம் செய்தனர். இந்த முப்பெரும் விழா திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் மீதும், திமுக தொண்டர்கள் மீதும் கொண்டுள்ள உயிரனைய ஈடுபாட்டினை உணர்த்தும் திருவிழாவாக அமைந்தது என்று கூறினால் அது மிகையில்லை.
* கொட்டும் மழையிலும் கலைந்து செல்லவில்லை
கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் சேர்களை தங்கள் தலையின்மீது உயர்த்தி பிடித்து ஆரவாரத்துடன் முதல்வரின் பேச்சை கேட்டு மகிழ்ந்தினர். இளைஞர்கள், மகளிர், தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். திராவிட மாடல் அரசு வழங்கி வரும் திட்டங்களில் பயன்பெறுவோர்களாகவும் தங்களுடைய மகிழ்ச்சியை ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்தனர். ஒன்றிய அரசின் அடக்குமுறை, ஆதிக்கம், இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரான கொள்கையை கொண்டிருக்கும் பாஜ அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுக பழனிசாமியையும் தமிழ்நாடு முதல்வர் வெட்டவெளிச்சம் போட்டு, தன்னுடைய பேச்சில் எடுத்துரைத்தபோது மிகப்பெரும் ஆரவாரத்துடன் கூடியிருந்த மக்கள் கேட்டு, கைத்தட்டி உற்சாக மூட்டினர்.