Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்வர் வேட்பாளர், கூட்டணி குறித்து டிசம்பருக்குள் பதில் கிடைத்து விடும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: முதல்வர் வேட்பாளர், கூட்டணி குறித்து டிசம்பருக்குள் பதில் கிடைத்து விடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜமாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மூத்த நிர்வாகிகளுடன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ. அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: அதிமுக எம்பி சி.வி.சண்முகத்தை சந்தித்ததில் வியப்பு ஏதும் இல்லை. சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் அவர் வீட்டில் இருப்பதாக அறிந்து நேரில் சென்று சந்தித்தேன். இது சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கலாம். முதல்வர் வேட்பாளர், கூட்டணிகள் குறித்து உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும், டிசம்பர் மாதத்திற்குள் பதில் கிடைத்து விடும்.

கூட்டணியை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் கூட்டணி அவசியம். 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2001ம் ஆண்டு தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியையும் மீறி வெற்றிகள் அமைந்துள்ளன. வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மதுரையிலிருந்து யாத்திரை தொடங்குகிறது.

அதில் பாஜ தேசியத் தலைவர் நட்டா கலந்து கொள்கிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 1977ம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்து வந்துள்ளார். நல்ல அனுபவம் வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை. கூட்டணி மாறலாம் என கடம்பூர் ராஜு பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று தான் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் என்னுடன் பேசினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.