தமிழ்நாட்டின் சமூகநீதி சுடரை முன்னின்று பாதுகாத்து இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: வீடியோ வெளியிட்டு திமுக பெருமிதம்
சென்னை: தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை முன்னின்று பாதுகாத்து, இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுக பெருமிதம் கொண்டுள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தள பதிவில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: 100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் ஏற்றிய சமூகநீதி என்னும் நெருப்பு இன்னும் சுடர் விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. பெரியாரோடு இந்த பெருநெருப்பு அணைந்து விடும் என இன எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், சமூகநீதி சுடரை பெரியாரிடம் இருந்து பேரறிஞர் அண்ணா பெற்று ஆட்சி அமைத்தார். அண்ணாவின் ஆட்சி விரைந்து முடிந்து விட்டது. இனி நெருப்பு அணைந்து விடும் என அதே இன எதிரிகள் நினைத்தனர்.
அவர்களின் எண்ணத்தை தனது சமூகநீதி ஆட்சி மூலம் பொய்யாக்கி சுக்குநூறாக உடைத்தார் கலைஞர். எளியவர்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும், எதிரிகளுக்கு எரி கல்லாகவும் எரிந்தது கலைஞர் கையில் தந்த அண்ணாவின் சமூகநீதி சுடர். பெரியாரின் திராவிட கருத்தியலை ஏந்தி, அண்ணா வழியில் கலைஞர் தந்த சமூகநீதிச் சுடரை அடுத்தகட்டத்திற்கு சமூகநீதி 2.0 என எடுத்து சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை முன்னின்று பாதுகாத்து இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.