சென்னை: திராவிட இயக்க எழுத்தாளரும், தி.மு.க கலை, இலக்கிய, பகுத்தறிப் பேரவை செயலாளருமான திருவாரூர் திருவிடம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியாரின் பெருந்தொண்டராக விளங்கிய திருவாரூர் தண்டவாளம் அரங்கராஜ் புதல்வரும், திராவிட இயக்க எழுத்தாளரும், திமுக கலை, இலக்கிய, பகுத்தறி பேரவைச் செயலாளருமான திருவாரூர் திருவிடம் மறைந்தார் என்று அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். திருவிடம் திராவிட இயக்கக் கொள்கைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க 1972 ஜூன் முதல் வார இதழாக வெளிவந்த ‘திருவிடம்’ எனும் இதழை தொடங்கி நடத்தி வந்தார். திராவிட இயக்க முன்னோடிகளின் படங்களை முகப்பில் ஏந்தி, பல முன்னணி திராவிட அறிஞர்களின் படைப்புகளையும், பகுத்தறிவு புதையலான கட்டுரைகளையும் கொண்டு இது வெளியாகி வந்தது. கலைஞரின் காலடி சுவடுகள். கலைஞர் 100: சகாப்தமும் சாமான்யனும், காந்தி - கோட்சே, திமுக பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும், திராவிடப் புதையல், தூக்கு வேண்டாம் துப்பாக்கியால் சுடு என எண்ணற்ற நூல்களை
தொடர்ந்து எழுதி வந்து அறிவு பங்களிப்பினைச் செய்து வந்தவர்.
திருவிடம் எழுதி சீதை பதிப்பகத்தின் வெளியீடாக வந்த திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை எனும் முக்கிய வரலாற்று நூலினை 2019ம் ஆண்டு கழக இளைஞரணி செயலாளர் - இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் என்பதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். திருவிடம் செறிவான பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாக கலைஞர் நூற்றாண்டில் சிறப்பு நேர்வாக தமிழ் வளர்ச்சி துறையின் ‘இலக்கிய மாமணி’ விருது இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
குடும்பம் குடும்பமாக, வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக இயக்கம் வளர்க்கும் திராவிட இயக்கத்தின் மரபில், தனது தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி, திராவிடம் பரப்புவதே தனது வாழ்க்கை பணி என தனிமனித இயக்கமாகவே செயல்பட்டு வந்த வரலாற்று, கருத்து பெட்டகத்தை நாம் இழந்துவிட்டோம். ஆற்றல்மிகு கொள்கை பிடிப்பாளரான திருவிடம் மறைவு தமிழ் சமூகத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக பெரும் இழப்பு. அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும் பணியும் திராவிட இயக்கத்தின் தொண்டினையும் வீரமிகு வரலாற்றையும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு தொடர்ந்து கொண்டு சேர்க்கும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திராவிட இயக்க அறிஞர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.