Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; கோவையில் நாளை உலக புத்தொழில் மாநாடு: 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்பு

கோவை: கோவையில் நாளை உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர். கோவை பீளமேடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலக புத்தொழில் மாநாடு (ஸ்டார்ட் அப்) 2025 நாளை (9ம் தேதி) துவங்குகிறது. 10ம் தேதி வரை 2 நாட்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

முன்னதாக இந்த மாநாடு தொடர்பாக தொழில், கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான கூட்டம் நடத்தப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்காக ஜிஎஸ்எஸ் என்ற செயலி உருவாக்கப்பட்டது. இதில் மாநாட்டில் பங்கேற்க இருக்கும் ஆளுமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. கருத்தரங்க அமர்வுகள், கண்காட்சி அரங்கம், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள் என மாநாடு குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தும் ஒரே தளத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் 39 நாடுகளில் இருந்து 254 பங்கேற்பாளர்களும் இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஒன்றிய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்குபெற உள்ளது. மாநாட்டில் நடைபெறும் கண்காட்சியில் 750க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தயாரிப்புகளும் பள்ளி கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்திப்புகளும் நடத்தப்பட உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 315க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், பல்வேறு அரங்கங்களில் நடத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுடன் ஸ்டார்ட் அப் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் பயன்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

127 கோடி ரூபாய்க்கு புதிய தொழில் முதலீடு செய்யப்படவுள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தமும் வெளியாகவுள்ளது. தனித்தனி அரங்குகள், சந்திப்புகள், தொழில் துறையின் ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு குறித்து ஸ்டார்ட் அப் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க டான்சீட் நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 79 கோடியே 49 லட்ச ரூபாய்க்கு அரசு முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத எஸ்சி, எஸ்டி ஸ்டார்ட் அப் ஆதார நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அரசு முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களில் ரூ.554.49 கோடி மதிப்பில் வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் 1000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தனியார் முதலீட்டாளர்களையும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைக்கும் டான்பண்ட் தளத்தின் மூலம் ரூ 128.84 கோடி தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியதால் 2021ல் 2032 ஸ்டார்அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டது. ஸ்டார்அப் நிறுவனங்களின் பதிவு தற்போது 12,171 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,063 நிறுவனங்களில் பெண்கள் நிறுவனர்களாக உள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

* அவினாசி மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: நாளை முதல்வர் திறப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: 2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலம், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்த பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை (9ம் தேதி) மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கை தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு சூட்டி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* தங்க நகை பூங்காவிற்கு அடிக்கல்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை (9ம் தேதி) காலை விமானம் மூலமாக கோவை வரவுள்ளார். பீளமேடு கொடிசியாவில் உலக புத்தொழில் இயக்க (ஸ்டார்ப் அப்) மாநாட்டினை காலை 9.45 மணிக்கு துவக்கி வைத்து பேசவுள்ளார். பின்னர் முதல்வர் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் சார்பில் அவினாசி ரோட்டில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 1791.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தினை துவக்கி வைக்கிறார்.

ஜிடி நாயுடு மேம்பாலம் என பெயர் வைக்கப்பட்ட இந்த பாலத்தின் மொத்த நீளமான 10.1 கி.மீ தூரம் காரில் முதல்வர் பயணம் செய்து பார்வையிடவுள்ளார். இதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் உறுதிமொழி எடுத்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்கிறார்.

பின்னர் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இதில் அமைச்சர்கள், அரசு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். முதல்வர் கோவையில் மதியம் 2.30 மணிக்குள் விழாக்களை முடித்து விட்டு விமானம் மூலம் சென்னை புறப்படவுள்ளார்.