முதல்வர் தேர்வில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்தது பீகாரில் புதிய அரசு 19ம் தேதி பதவியேற்பு? நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்கிறார்
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய அரசு வரும் 19 அல்லது 20ம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் தேர்வில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, 10வது முறையாக நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறையை தொடங்க, இன்று தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்கிறார்.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.
இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இக்கூட்டணியில் பாஜ 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி 19, இந்துஸ்தான் அவாம் மோர்சா 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வென்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 35 இடங்களே கிடைத்தன.
பீகாரில் கடந்த 20 ஆண்டாக நிதிஷ் குமார் முதல்வராக நீடித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பாக அவரது வயது மூப்பு மற்றும் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனால், மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைந்தாலும் நிதிஷ் குமார் முதல்வராக்கப்பட மாட்டார் என கூறப்பட்டது. அதற்கேற்றார் போல், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே அக்கூட்டணி தேர்தலை சந்தித்தது. தேர்தல் பிரசாரத்திலும் நிதிஷ் குமார் ஓரங்கட்டப்பட்டார். தேர்தல் வெற்றிக்குப் பிறகும் கூட அவரை பாஜ மேலிட முக்கிய தலைவர்கள் யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறவில்லை.
மீண்டும் முதல்வராக நிதிஷ்குமாரை பதவியில் அமர்த்த பாஜ விரும்பாததால், முதல்வர் தேர்வில் கடும் குழப்பம் நீடித்தது. இதுதொடர்பாக டெல்லியில் பாஜ மேலிடத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், வேறு வழியின்றி மீண்டும் நிதிஷ் குமாரையே முதல்வர் பதவியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், புதிய அரசு அமைவதில் இருந்த முட்டுக்கட்டை விலகி உள்ளது.
புதிய அமைச்சரவை குறித்து டெல்லியில் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் சஞ்சய் ஜா, லாலன் சிங் ஆகியோர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர். அதே சமயம், பாட்னாவில் நிதிஷ் குமார், தேஜ கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்படி, புதிய அரசு அமைவதற்கான நடைமுறைகள் இன்று முதல் தொடங்க உள்ளன.
பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது. அதில், 17வது பீகார் சட்டப்பேரவையை கலைக்க முடிவு செய்யப்பட்டு, நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அதைத் தொடர்ந்து, வரும் 19ம் தேதி அல்லது 20ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. 10வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்புக்கான ஏற்பாடுகள் பாட்னாவில் தீவிரமாக நடந்து வருகின்றன.
* பாஜவுக்கு 15 அமைச்சர்கள்
நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘6 எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற விகிதத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாஜவுக்கு 15 அமைச்சர், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர்கள் பதவி வழங்கப்படும். லோக் ஜனசக்திக்கு 3, எச்ஏஎம், ஆர்எல்எம் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தரப்படும்’’ என்றார்.
* தயாராகிறது காந்தி மைதானம்
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகைக்கு பதிலாக பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல ஒன்றிய அமைச்சர்கள், பாஜ முதல்வர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.


