Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்: ‘கட்சியின் போக்கு சரியில்லை’ என கார்த்திக் தொண்டைமான் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக போகும் போக்கே சரியில்லை என அவர் குற்றம்சாட்டினார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவும் தங்களது தேர்தல் களத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

பாஜவுடன் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைத்ததை அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியில் இருந்து விலகி முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவரும், புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவருமான இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏவும், நகர்மன்ற முன்னாள் தலைவருமான கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், திமுக அயலக அணி மாநிலச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார். இந்தநிலையில், அதிமுகவை சேர்ந்த புதுக்கோட்டை மன்னர் வாரிசு திமுகவில் இணைந்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இணைந்தது குறித்து கார்த்திக் தொண்டைமான் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக, மதவாத சக்தி கட்சிகளுக்கு உறுதுணை போகிறது.

அது எனக்கு பிடிக்கவில்லை. அவர்களது செயல்பாடுகளும் சரியில்லை. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்துடன், முதல்வர் மு.க ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து கட்சி பணிகளையும், மாவட்ட திமுகவில் இணைந்து நிச்சயமாக பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.