Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கப்பலில் நிவாரணப் பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்: 950 டன் அத்தியாவசிய பொருட்களை அள்ளித் தந்தது தமிழக அரசு

சென்னை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் இந்திய கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக இலங்கை இதுவரை சந்திக்காத அதிதீவிர இயற்கை பேரிடரை சந்தித்துள்ளது. அங்கு தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தன.

இதனால் பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பொருள் சேதம், உயிர் சேதம் என இலங்கை நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 214 பேர் மாயமாகி உள்ளதாகவும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கை மக்களுக்கு தமிழகமும், தமிழக மக்களும் உறுதுணையாக இருப்பது மட்டுமின்றி தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து ‘டிட்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும், என மொத்தமாக 950 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களின் மாதிரி தொகுப்பினை இலங்கை துணை தூதர் கணேசநாதன் கீதீஸ்வரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிவாரண பொருட்களை பொறுத்தவரையில் 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் பால்பவுடர், 25 மெட்ரிக் டன் கொண்ட 5000 வேட்டிகள், 5000 சேலைகள், 10,000 துண்டுகள், 10,000 போர்வைகள் மற்றும் 1000 தார்பாலீன்கள் ஆகிய நிவாரண பொருட்களையும் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 150 மெட்ரின் டன் சர்க்கரை, 150 மெட்ரிக் டன் பருப்பு உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், கைத்தறி துறை மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை ஆகிய துறைகள் மூலம் ஒருங்கிணைந்து சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், சென்னை துறைமுகத்தில், இலங்கை துணை தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் எம். செனாய், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், சென்னை துறைமுகத்தின் தலைவர் விஸ்வநாதன், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார், பொதுத்துறை கூடுதல் செயலாளர் பாலசுப்ரமணியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, கமோடர் அனில்குமார், கடற்படை ஸ்டேசன் கமாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* முதல்வருக்கு இலங்கை துணைத்தூதர் நன்றி

இலங்கை துணைத்தூதர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இலங்கை மக்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மக்களுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இப்போது இலங்கையில் நிலைமை ஓரளவுக்கு சரியாகியிருக்கிறது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். நாங்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறோம்’’ என்றார்.