Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வின்பாஸ்ட் கார் விற்பனை; ஜூலை 31ல் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தயாராகி வரும் வின்பாஸ்ட் கார்கள் விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 31ம் தேதியன்று காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விஎப்6, விஎப்7 வகை பேட்டரி கார்களுக்கான முன்பதிவு கடந்த ஜூன் மாதம் மத்தியில் துவங்கியது. இந்த சூழலில், இங்குள்ள பிளாண்டில் தயார் செய்யப்படும் இரு மாடல்களிலான கார்கள் விற்பனை வரும் 31ம் தேதி முதல் துவங்குகிறது.

வின்பாஸ்ட் நிறுவன கார்கள் முதல் விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். இந்த இருவகை கார்கள் விற்பனையை தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வெகிக்கிள் எனப்படும் பெரியவகை பேட்டரி கார்களையும் அடுத்தடுத்து சந்தைப்படுத்த வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தவகை பேட்டரி கார்களை விற்பனைக்கு கொண்டுவர வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது.