Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

படிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு இன்று "முதல்வர் படைப்பகளுக்கும்," முக்கியத்துவம் அளித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: படிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு இன்று "முதல்வர் படைப்பகளுக்கும்," முக்கியத்துவம் அளித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "கல்விக்கு முக்கியத்துவம் தருகின்ற ஒரு அரசு ஒன்றியத்தில் உண்டு என்றால் அது தமிழகம்" இன்றைக்கு சென்னை மாநகராட்சி பள்ளிகள் பெருமையின் நிறமாக மாறிக்கொண்டிருக்கின்றது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்

முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (11.12.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் "முதல்வர் படைப்பகம்" அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகளையும் மற்றும் கொண்டித்தோப்பு, அம்மன்கோயில் தெருவில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி நிதியுதவியுடன் ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் ரூபாய் 4.60 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகள் மற்றும் "முதல்வர் படைப்பகம்" கட்டுமானப் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:

தமிழக முதல்வர் எங்கள் உயிரினும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அவர்கள் சீரிய சிந்தனையில் உதித்திட்டத்தின் திட்டமான "முதல்வர் படைப்பகம்" என்ற நற்பெயரில் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட இந்த திட்டமானது இதுவரையில் மூன்று "முதல்வர் படைப்பகங்கள்" திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. 30 "முதல்வர் படைப்பகங்கள்" உருவாக்குகின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்றைக்கு துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் சுமார் 7,500 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன் கூடிய மூன்றடுக்கு மாடிகளை கொண்ட சுமார் 2.50 கோடி ரூபாய் செலவில் இந்த படைப்பகத்திற்குண்டான கட்டுமான பணிகள் இன்று துவக்கி வைத்திருக்கின்றோம்.

இப்பள்ளியில் சென்னை மாநகராட்சியின் சார்பில் நான்கு வகுப்பறைகள் கொண்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட நவீன மையத்தோடு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதை பார்வையிட்டோம். வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இந்த மாணவ செல்வங்களுக்கு இதை அர்ப்பணித்து இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் நகர் "முதல்வர் படைப்பகம்," மற்றும் நவீன நூலகம், அதேபோல் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற தேர்ச்சி எழுத அவர்களுக்கு உண்டான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தோம். இளைஞர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்று ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பயிற்சி வகுப்பில் 110 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் பயனடைகின்றார்கள், "முதல்வர் படைப்பகத்தில்" 200க்கும் மேற்பட்ட மாணவ செல்வங்கள் பயன்பெறுகின்றார்கள், நூலகத்தில் ஒரு நாளைக்கு 150 பேர் வந்து செல்கின்றார்கள்.

இப்படி மக்களுடைய வரவேற்பையும் தமிழக முதல்வர் அவர்களின் கொள்கையான “படி, படி, படி, நம்மிடம் இருந்து திருட முடியாத ஒரே சொத்து படிப்பு” என்றார். அந்த வகையில் படிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு இன்று "முதல்வர் படைப்பகளுக்கும்," முக்கியத்துவம் அளித்து, மாநகராட்சி பள்ளிகள் என்றாலே வெறுமையின் நிறமாக பார்த்துக் கொண்டிருந்த பள்ளிகள், இன்றைக்கு சென்னை மாநகராட்சி பள்ளிகள் பெருமையின் நிறமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் "கல்விக்கு முக்கியத்துவம் தருகின்ற ஒரு அரசு ஒன்றியத்தில் உண்டு என்றால் அது தமிழகம்" என்ற பெருமையோடு வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் சொ.வேலு, தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர், ராஜன்பாபு, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.