தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணி இடங்களுக்கு 13 பேர் தேர்வு: பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிறைவு செய்திட அரசாணை வெளியிடப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.